கூட்டுறவு வங்கியில் நகை மோசடி வங்கி பொறுப்பாளர் சஸ்பெண்ட்

புதுச்சேரி. ஜூன் 6: புதுச்சேரி கொம்பாக்கத்தில் கூட்டுறவு வங்கியில் நகை மோசடியில் ஈடுபட்ட வங்கி பொறுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புதுச்சேரி அடுத்த கொம்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாப்பாஞ்சாவடியைச் சேர்ந்த கதிரவன் என்பவர் பொறுப்பாளராக உள்ளார். கூட்டுறவு கடன் சங்க பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 201 பேருக்கு நகைக்கடன் கொடுக்கப்பட்ட நிலையில் 18 நகை பொட்டலங்கள் காலியாக இருப்பதும், அதிலிருந்த (586 கிராம்) நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. ரூ. 30 லட்சம் மதிப்பிலான நகைகள் மோசடியாக வங்கியிலிருந்து எடுத்துச் சென்றிருப்பது தெரியவரவே முதலியார்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பொதுமக்களின் நகைகளை தனியார் அடகு கடைகளில் அடமானம் வைத்து கதிரவன் பணம் பெற்று இருப்பது தெரியவந்தது. அந்த அடகு கடைகளுக்கு சென்ற போலீசார், 92 பவுன் நகைகளை அங்கிருந்து மீட்டனர். பின்பு வங்கி பொறுப்பாளர் கதிரவனை, காலாபட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட வங்கி பொறுப்பாளர் கதிரவனை, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா நேற்று உத்தரவிட்டுள்ளார். மற்ற கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

The post கூட்டுறவு வங்கியில் நகை மோசடி வங்கி பொறுப்பாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: