சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி போராட்டம் : நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் துவங்கியது

நாமக்கல்: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவிலான லாரி ஸ்டிரைக் நேற்று தொடங்கியது. இதனால் தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடவில்லை. பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.  டீசல் விலையை குறைக்க வேண்டும், 3ம் நபர் விபத்து காப்பீடு பிரீமியம் உயர்வை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (20ம் தேதி) காலை முதல் இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நடத்தும் இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது. காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதுமாக சுமார் 68 லட்சம் லாரிகள்  நிறுத்தப்பட்டுள்ளன.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம்

கூறியதாவது, திட்டமிட்டப்படி லாரி ஸ்டிரைக் துவங்கிவிட்டது. தமிழகத்தில் 4.50  லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் எந்த பகுதியிலும் லோடு ஏற்றப்படவில்லை.  அனைத்து மாவட்ட, தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தினர் அமைதியான முறையில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும். டீசல் விலை தினமும் உயர்த்தப்படுவதால் ஒரு லாரி வைத்து தொழில் செய்யும் பல உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக மத்திய அரசு அகற்ற முன்வர வேண்டும்.  லாரி ஸ்டிரைக் நடப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கு தினமும் சுமார் ₹200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும், என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: