×

கூடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி

கூடலூர், நவ.14: கூடலூரை அடுத்துள்ள மேல் கூடலூரில் இயங்கி வரும் அரசு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எதிர்பார்ப்பில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தாலுகா அரசு தலைமை மருத்துவமனையாக இயங்கி வந்த கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி மாற்றப்பட்டது. அதற்கான கட்டிட வசதிகள் ஏற்படுத்தும் வகையில், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் நடந்து வருகின்றது. மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால் தொடர்ந்து பழைய நிலைமையே நீடித்து வருகிறது.

மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட 14 மருத்துவர்கள் பணியிடங்களில், தலைமை மருத்துவர் உள்ளிட்ட சிலரை தவிர பலர், 2 ஆண்டு ஒப்பந்த முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். 2 ஆண்டுகளாக இருந்த ஒப்பந்த காலத்தை அரசு ஓராண்டாக மாற்றியதை தொடர்ந்து, கூடலூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த, முதுநிலை மருத்துவர்கள், கடந்த ஆண்டு தங்களை விடுவித்து சென்ற நிலையில், தலைமை மருத்துவர், குடியுரிமை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 7 மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.

தொடர்ந்து, பணியாற்றி வந்த மருத்துவர்கள் ஓராண்டு ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் கடந்த மாத இறுதியில் பணியில் இருந்து விடுவிக்கப்படனர். இதனால் இந்த மருத்துவமனையில் 14 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என அனைத்து தரப்பு நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் அவசர சிகிச்சைக்காக கூடலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் நாடும் நோயாளிகள் உடனடியாக ஊட்டி, கோவை மற்றும் கேரள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு 50 முதல் 100 கிலோ மீட்டர் தொலைவு கடந்து மருத்துவ தேவைக்காக செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண தரப்பு மக்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதியில் தரமான மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என கூடலூர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அரசின் நோக்கம் மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் நிரந்தரமான மருத்துவர்கள் இங்கு பணியில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதில் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள அனைத்து மருத்துவர் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என கூடலூர் பந்தலூர் பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையில் வந்த மருத்துவர்கள் பணிக்காலம் முடிந்து சென்று விட்டதாகவும், கூடலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர் காலிப்பணியிடங்கள் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கூடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Koodalur District Government Hospital ,Koodalur ,Upper Koodalur ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் நள்ளிரவில் நீர் திறக்க உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை