குன்னூர் காட்டேரி பண்ணையில் உரக்கிடங்கை உடைத்த காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்

குன்னூர்: குன்னூரில் தனது வழித்தடத்தில் வேலியால் அமைக்கப்பட்டிருந்த உரக்கிடங்கை உடைத்து கொண்டு காட்டு யானைகள் வெளியே வந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து உலா வருகின்றன. சமீபகாலமாக யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வேலிகள் அமைத்து விவசாய தோட்டங்களாகவும், காட்டேஜ் உள்ளிட்ட கட்டிடங்களாகவும் மாற்றப்படுகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் தடம் மாறி அவ்வப்போது சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. யானை வழித்தடம் மறிக்கப்படுவதால் அது கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று குன்னூர் காட்டேரி பண்ணையில் ஒரு குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் சாலையை கடந்தன. இதைப்பார்த்த மக்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர், அந்த யானைகள் தோட்டக்கலை துறை பண்ணையின் உர பதனிடும் மையம் வழியாக சென்றபோது செல்ல வழியில்லை. இதனால், ஆத்திரமடைந்த யானைகள், வேலியால் அமைக்கப்பட்டிருந்த உரக்கிடங்கை உடைத்து கொண்டு அதற்கான வழித்தடத்தில் சென்றன. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில் தோட்டக்கலை துறை மூலம் உரக்கிடங்கு அமைக்கப்பட்ட நிலையில் செல்ல வழி இல்லாமல் கிடங்கை உடைத்து கொண்டு யானைகள் தனது வழித்தடத்தில் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது….

The post குன்னூர் காட்டேரி பண்ணையில் உரக்கிடங்கை உடைத்த காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: