×

கிருஷ்ணகிரி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, ஆக.12: கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,325 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய அணைகளாக கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு நீர்த்தேக்கங்கள் விளங்கி வருகிறது. இந்த அணைகள் மூலம் பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் மூலம், வருடத்திற்கு இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து, கடந்த ஜூலை மாதம் 5ம் தேதியன்று முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில் 105.2 மி.மீ., மழை பதிவானது. அன்று மாவட்டம் முழுவதும் 618.50 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதேபோல், நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஊத்தங்கரையில் – 72.60 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதே போல் பாம்பாறு அணை- 62 மி.மீ., கிருஷ்ணகிரி – 58 மி.மீ., போச்சம்பள்ளி – 19.40 மி.மீ., பாரூர் – 15 மி.மீ., பெனுகொண்டாபுரம் – 7.30 மி.மீ., கே.ஆர்.பி.டேம் – 6.40 மி.மீ., நெடுங்கல் – 4.80 மி.மீ., ஓசூர் – 3.50 மி.மீ., அஞ்செட்டி- 2 மி.மீ., என மொத்தம் 251 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

இவ்வாறு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் 608 கன அடியாக இருந்த நீர்வரத்து, நநேற்று 1073 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதியும், முதல்போக பாசனத்திற்கு போதிய தண்ணீரை இருப்பு வைத்து, மீதி வரும் உபரி நீர் அனைத்தையும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிட நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 1,325 கன அடி தண்ணீரை சிறு மதகுகள் வழியாக திறந்து விட்டனர்.

மேலும், மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆற்றை கடக்க கூடாது என்றும், கால்நடைகளை ஆற்றின் அருகே விடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri dam ,Krishnagiri ,Krishnagiri district ,Kelavarapalli Dam ,Bambaru Reservoir ,Dinakaran ,
× RELATED தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண்...