×
Saravana Stores

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

போச்சம்பள்ளி: தகாத உறவை கணவன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண், தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்கம் தாளாமல், அவரது காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ள பாளேத்தோட்டம் குறிஞ்சி கங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகள் திலகவதி(24). இவருக்கும் ஊத்தங்கரை வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (எ) சக்திவேல் (27) என்பவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சக்திவேல், பொக்லைன் ஆபரேட்டராக உள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சக்திவேல் வேலைக்காக டெல்லி சென்ற போது, அவரது நண்பரான ஹரிஷ் (22) என்பவர், சக்திவேலின் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து, உதவியாக இருந்துள்ளார். அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், திலகவதிக்கும், ஹரிசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது.

இந்நிலையில், சக்திவேல் செல்போனில் பேசும்போது, மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், அவருக்கு தெரியாமல் டெல்லியில் இருந்து திடீரென ஊருக்கு வந்தார். அப்போது, தனது வீட்டில் ஹரிசும், திலகவதியும் தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த சக்திவேல், திலகவதியை, அவரது தாய் வீடான குறிஞ்சி கங்கைபுரம் கிராமத்திற்கு அழைத்து சென்று விட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த திலகவதி, கடந்த 9ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, காதலியான திலகவதி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ஹரிஸ், அன்றிரவே ஊத்தங்கரையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ஊத்தங்கரை போலீசார், ஹரிசின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திலகவதிக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ பாபு இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Bochampalli, Krishnagiri district ,
× RELATED பட்டாலியன் பயிற்சி காவலர் குடும்பத்தினருக்கு ₹2.81 லட்சம் நிதி