காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் கிராமங்களில் மீண்டும் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரிப்பு-விலையை குறைக்க பெண்கள் கோரிக்கை

தர்மபுரி : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், காஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காஸ் சிலிண்டர் ₹938 ஆக விலை உயர்ந்துள்ளது. வர்த்தக சிலிண்டர் ₹1710க்கு சப்ளை செய்யப்படுகிறது. வீட்டு சிலிண்டர் ₹1000ஐ நெருங்கியுள்ளது. இதனால் கிராமமக்கள் பழைய படி விறகு அடுப்புக்கு மாறியுள்ளனர். ஏற்கனவே இருக்கும் விறகு அடுப்பில் சுடுதண்ணீர் மட்டும் காய்ச்சி பயன்படுத்தி வந்தனர். தற்போது சிலிண்டர் விலை உயர்வால், காலை மற்றும் மதியம் சாப்பாட்டிற்கும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருசில இடத்தில் முழுநேரமும் விறகு அடுப்பில் சமைக்கும் பழைய பழக்கத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விறகு அடுப்பு மீண்டும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மலை மற்றும் காடுகளில் விறகு சேகரிக்க பெண்கள் செல்வதும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கவலைக்காரன்கொட்டாயை சேர்ந்த மூதாட்டி தஞ்சம்மாள் (65), என்எஸ் ரெட்டியூர் ஜெயலட்சுமி (45) ஆகியோர் கூறுகையில், ‘சிலிண்டரின் விலை அடிக்கடி அதிகரிப்பதால், எங்களை போல் சாதாரண கிராமத்து மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.பணம் இருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், எங்களை போன்றவர்கள் காஸ் சிலிண்டர் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, மீண்டும் விறகு அடுப்பையே பயன்படுத்துகின்றனர்.தற்போது எங்கள் கிராமத்தில் விறகு அடுப்பு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க, சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்,’ என்றனர்.காஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூறுகையில், சிலிண்டர் விலை அடிக்கடி உயர்வால், எங்களுக்கு வாடிக்கையாளர்கள் தரும் டிப்ஸ் தடைபடுகிறது. நாங்கள் வாய் விட்டும் கேட்க முடியவில்லை.விலை ஏற்றத்தால், மனஉளைச்சலில் தான் சிலிண்டர் வாங்குகின்றனர். எனவே, எங்களுக்கு சரியான சம்பளம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்,’ என்றனர்….

The post காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் கிராமங்களில் மீண்டும் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரிப்பு-விலையை குறைக்க பெண்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: