சென்னை: தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தியடிகளின் கருத்துகளையும், சமூக சிந்தனைகளையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் பேச்சு போட்டிகள் 12.10.2022 (புதன்) காலை 10 மணிக்கு தனித்தனியே நடைபெற உள்ளன. சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று இடங்களாக பிரிக்கப்பட்டு பேச்சு போட்டிகள் நடத்தப்படும். ஒரே நாளில் சென்னை உள்பட 38 மாவட்டங்களிலும் இப்போட்டிகள் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கு வடசென்னை, அரசு உயர்நிலைப் பள்ளி வில்லிவாக்கம், தென்சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அசோக் நகர், மத்திய சென்னை, ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி வியாசர்பாடி, தென் சென்னை, ராணிமேரி கல்லூரி, மத்திய சென்னை, பாரதி மகளிர் கலைக்கல்லூரி பிராட்வே ஆகிய இடங்களில் பேச்சு போட்டிகள் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்: 1) அண்ணலின் அடிச்சுவட்டில், 2) காந்தி கண்ட இந்தியா, 3) வேற்றுமையில் ஒற்றுமை, 4) பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம். கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்: 1) வாழ்விக்க வந்த எம்மான், 2) மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும், 3) சத்தியசோதனை, 4) எம்மதமும் நம்மதம், 5) காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, 6. இமயம் முதல் குமரி வரை. பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் சிறப்பு பரிசாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.2000 வீதம் இரண்டு பேருக்கு வழங்கப்படும். பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும்….
The post காந்தி அடிகளின் கருத்துகள் குறித்து மாணவர்களுக்கு பேச்சு போட்டி appeared first on Dinakaran.