காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி: வாகன ஓட்டிகள் சிரமம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், மழை காலம் முடிவதற்கு முன்பாகவே பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.

பனிப்பொழிவு காலமான மார்கழி, தை மாதங்கள் போல் காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை சுமார் 8 மணி வரை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை, ரயில் நிலையம், அய்யங்கார்குளம், புஞ்சை அரசன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் திடீரென குளிர் பிரதேசமான ஊட்டியைபோல் மாறி உள்ளது.

மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ளது போல பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இந்த பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனங்கள் சிறிது தூரத்தில் மட்டுமே தெரிந்ததால், வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சிரமத்துடன் ஒட்டி சென்றனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு புறவழிசாலை, பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணிவரை கடும் பனிமூட்டம் நிலவியது.

இதனால், அப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல் சீதோஷ்ண நிலையை மிஞ்சும் அளவுக்கு சாலையே தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் படிப்படியாக பனிமூட்டம் விலகத் தொடங்கியதும் போக்குவரத்து சீரானது. இதனால், அப்பகுதி மக்கள் நடைபயிற்சிக்குகூட செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

The post காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி: வாகன ஓட்டிகள் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: