கல்வி சிறந்த தமிழ்நாடு

2022 ம் ஆண்டிற்கான தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 15-07-2022 அன்று வெளியிட்டுள்ளார். இந்த பட்டியல் திராவிட மாடல் ஆட்சியின் கல்விக் கொள்கைக்கு மணி மகுடமாக திகழ்கிறது. கடந்த 2016  முதல் ஒவ்வொரு வருடமும் ஒன்றிய அரசின் கல்வித் துறை, இந்த தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 4,786 உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. பல்வேறு பிரிவுகளில் 902 கல்வி நிறுவனங்கள் இந்த தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில், 163 கல்வி நிறுவனங்கள் அதாவது 18 சதவீத கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது தரமான உயர் கல்வி வழங்கும் மாநிலங்களில் நம்பர் 1 தமிழகம் என்பதை பறைசாற்றி உள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தை சேர்ந்தது. தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் 100 இடத்தில் 21 இடங்கள் தமிழகத்துக்குத்தான். அதே போல், 50 சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் பட்டியலில் 10 இடத்தையும், 100 சிறந்த கல்லூரிகளில் 32ஐயும் தமிழகம் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடலை முன்நிறுத்தி பேசும்போதெல்லாம், அது என்ன சாதித்தது என்று எதிர் கேள்வி எழுப்புபவர்களின் தலையில் குட்டு வைப்பது போல் ஒன்றிய அரசின் தரவரிசை பட்டியல் அமைந்துள்ளது.  28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து குவிந்த விண்ணப்பங்களில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதையும், அதில் 18 சதவீதம் தமிழக உயர் கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளதையும் திராவிட மாடல் கல்வியின் வெற்றி என்பதை அவர்கள் இனியாவது உணர வேண்டும். தரமான கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது தான் திராவிட மாடல் கல்வியின் அடிப்படை கொள்கை. அந்த இலக்கை நோக்கி தமிழகத்தை நம் முதல்வர் வழி நடத்திக்கொண்டிருக்கிறார். அவரது முயற்சியால், இப்போது கல்வி சிறந்த தமிழ்நாடு என்பது இந்திய அளவில் நிரூபணம் ஆகியுள்ளது. மருத்துவமனையில் உள்ள முதல்வரோ, சிகிச்சை காலத்திலும் ஓய்வு எடுக்காமல், தமிழகத்தின் வளர்ச்சி பற்றியே சிந்தித்து செயலாற்றி வருகிறார். ஒன்றிய அரசின் தர வரிசை பட்டியல் வெளியானதும், அதில் இடம் பெற்ற தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்த்துகளை உடனே டிவிட்டரில் தெரிவித்துள்ள அவர், உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்  என்று குறிப்பிட்டுள்ளார்.  உயர்கல்வியை தன்வசமாக்க  முயற்சி மேற்கொண்டு வரும் ஒன்றிய அரசு, திராவிட மாடல் கல்வியின் மேன்மையை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். கல்வித் துறையில் தமிழக அரசுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைதான் இந்த தரவரிசை பட்டியல் உணர்த்துகிறது….

The post கல்வி சிறந்த தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: