கலெக்டர் அலுவலக வளாகத்தையொட்டி ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கிணறு: அசம்பாவிதம் ஏற்படும் முன் மூட கோரிக்கை

 

செங்கல்பட்டு. பிப்.12: செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தையொட்டி ஆபத்தை விளைவிக்கும் விதமாக ஒரு விவசாய கிணறு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் பெரும் ஆபத்தை சந்திக்கும் அபாய நிலை நிலவுகிறது. இந்த கிணற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்து சுமார் ஒருமாத காலமாகிறது. அதிலும் ஆட்சியர் அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்து 10 நாள் ஆகிறது.

இந்த ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம், ஓய்வூதியதாரர் துறை, பதிவுத்துறை, மாற்றுத்திறனாளி அலுவலகம் உள்பட அனைத்து அலுவலகங்களும் ஒருசேர இயங்கி வருகிறது. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த புதிய வளாகத்தையொட்டி ஒரு பழம்பெரும் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றை சுற்றியும் நிறைய மாடுகள் மேய்ந்து வருகின்றன.  கிணற்றை ஒட்டியே மாடுகள் மேய்வதால் மண் சரிந்து மாடுகள் கிணற்றில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வாராவாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திலும், வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இதில் மன அழுத்தத்தில் வருபவர்களும் உண்டு. அவர்களில் தங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் நிகழ்வும் பாதிக்கப்பட்ட புகார் மனுதாரர்கள் வாயிலாக அறங்கேறுவது உண்டு.

இந்நிலையில் ஆட்சியர் வளாகத்தை ஒட்டி அருகிலேயே இதுபோன்ற கிணறு இருப்பதால் இது தற்கொலைக்கு வித்தாக அமைந்துவிடக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள், பெரியோர்கள், பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே இந்த கிணற்றைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலைகளை கொண்டு மூட வேண்டும். இதேபோல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் அந்த கிணற்று பக்கம் போகாத வகையில் 10 அடிக்கு வளாகத்தைச் சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post கலெக்டர் அலுவலக வளாகத்தையொட்டி ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கிணறு: அசம்பாவிதம் ஏற்படும் முன் மூட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: