அம்பத்தூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அம்பத்தூர் அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், அன்னம் தரும் அமுதக்கரங்கள் என்ற பெயரில், அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுகவினருக்கு நற்சான்றிதழைதான் அளித்துள்ளார், என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஒன்றிய அரசுக்கு துதி பாடுவது, பாரதிய ஜனதாவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கிற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று. இதுபோன்ற துதி பாடுபவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலைமையில் நாங்கள் இல்லை.
ஒன்றிய அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்ற எங்களுடைய நடவடிக்கையை மக்கள் முழுமையாக ஏற்றுள்ளார்கள்,’’ என்றார். இந்நிகழ்ச்சியில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ், 86வது வார்டு கவுன்சிலர் கமல், மருத்துவர் சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post சுயமரியாதை என்ற வார்த்தை அதிமுகவினருக்கு பிடிக்காது: அமைச்சர் பி.கே சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.