கடந்த அதிமுக ஆட்சியின் போது பட்டு வளர்ச்சித்துறையில் பணி நியமனத்தில் ₹25 கோடி ஊழல்: மாஜி அமைச்சர், அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

சேலம்:  தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன், ஆலோசகர்  பெரியசாமி ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று, சேலம் வின்சென்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு, ஒரு முறைகேடு புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பட்டு வளர்ச்சித்துறையில் கடந்த 2014, 2016ம் ஆண்டுகளில் உதவி பட்டு ஆய்வாளர்கள், இளநிலை பட்டு ஆய்வாளர்கள் பணி நியமனம் நேரடியாக நடந்தது. இப்பணி நியமனங்கள், துறை விதிமுறைகளுக்கு எதிராகவும், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்றாமலும் மேற்கொள்ளப்பட்டது. மெய்தன்மை இல்லாத சான்றிதழ்கள், இன சுழற்சியில் முறைகேடு போன்றவற்றை மேற்கொண்டு, நியமனத்தை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் பலமுறை புகார் மனுக்களை ஆதாரங்களுடன் துறையின் தலைமைக்கு அனுப்பினோம். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.மாறாக 2014ம் ஆண்டு முறைகேடாக உதவி ஆய்வாளர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு இரண்டு கட்டமாக ஆய்வாளராகவும், உதவி இயக்குநராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இளநிலை ஆய்வாளர்களுக்கு ஒரு கட்டமாக உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  2016ம் ஆண்டு முறைகேடாக பணி நியமனம் பெற்ற உதவி ஆய்வாளர்களில் ஒரு பகுதியினருக்கு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள், கடந்த ஆட்சியாளர்களின் உடந்தையுடன் துறை அலுவலர்களால் நடைப்பெற்றது. அதனால், உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் 350 இளநிலை பட்டு ஆய்வாளர் பணியிடமும், 70 உதவி பட்டு ஆய்வாளர் பணியிடமும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டது. போலி சான்றிதழ்கள், இன சுழற்சி விகிதாச்சாரத்தை பின்பற்றாமை போன்ற முறைகேட்டில் அமைச்சர், அதிகாரிகள் ஈடுபட்டு ₹25 கோடிக்கு ஊழல் புரிந்துள்ளார்கள். கடந்த காலங்களில் நாங்கள் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மீண்டும் புகார் கொடுத்துள்ளோம்்,’’ என்றார்….

The post கடந்த அதிமுக ஆட்சியின் போது பட்டு வளர்ச்சித்துறையில் பணி நியமனத்தில் ₹25 கோடி ஊழல்: மாஜி அமைச்சர், அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: