ஓராண்டில் 192 புதிய தொழில் முனைவோரை உருவாக்கி சாதனை

கிருஷ்ணகிரி, ஜூலை 7: கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையம், ஓராண்டில் 192 புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. நடப்பாண்டில் கடந்த 3 மாதத்தில் 20 சதவீத இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயாரிக்கப்படுகிறது. மேலும், போச்சம்பள்ளியில் டூவீலர் தயாரிப்பு நிறுவனம், ஓசூரில் அசோக் லேலாண்ட், டைட்டான், ராயக்கோட்டை அடுத்த வன்னிபுரத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ், தளி மதகொண்டப்பள்ளியில் எலட்ரிக் ஸ்கூட்டர் கம்பெனி, குருபரப்பள்ளி அருகே டெல்டா எல்க்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கம்பெனிகள் உள்ளன. இந்த நிறுவனங்களின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். அந்த கம்பெனிகளை சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் தொழில் முனைவோராகி பயன்பெற்று வருகின்றனர். இதற்காக அரசு சார்பில், பல்வேறு சலுகைகள், மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கி வருகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் கூறியதாவது: மாவட்ட தொழில் மையத்தில், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி வேலை உருவாக்கும் திட்டம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றில் தொழில் துவங்க வசதிகள் செய்து தரப்படுகிறது. குறைந்தபட்ச கல்வி தகுதியுடன், தகுதியுள்ள தொழில்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கூட, ₹5 கோடி வரை கடன் பெறலாம்.

கடந்தாண்டில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தில் 128 பேர், வேலை இல்லாதவர்களுக்கு தொழில் முனையும் திட்டத்தில் 42 பேர், புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் 22 பேர் என மொத்தம் 192 பேரை புதிய தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளோம். நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்றே மாதத்தில், 20 சதவீத இலக்கை தாண்டி, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி கிருஷ்ணகிரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டின் துவக்கம் முதலே, பல இளைஞர்கள் ஆர்வமுடன் தொழில் துவங்க விண்ணப்பித்துள்ளனர். தகுதியுள்ள இளைஞர்கள் படித்து முடித்தவுடன், தொழில் குறித்த 2 வருட அனுபவம் இருந்தாலே போதும். அடுத்த 5 வருடங்களில் மிகப்பெரிய இலக்கை நோக்கி செல்ல, மாவட்ட தொழில் மையம் வழிவகை செய்கிறது.

இளைஞர்கள் எந்த தொழில் செய்தாலும் தயக்கமின்றி, பிறரை முற்றிலும் சார்ந்து தொழில் செய்யாமல், முன் அனுபவத்துடன் தொழில் செய்தால், நிச்சயமாக வெற்றி பெறலாம். கடன் திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் முன்னேறலாம். ஆட்டோ மொபைல்ஸ், பாக்குமட்டை, மரச்செக்கு எண்ணெய் கடை, கார்மெண்ட்ஸ், ஹாலோ பிளாக் கம்பெனிகள் உள்ளிட்ட தொழில்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் துவங்கியுள்ளனர். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில், பெருநகரங்களுக்கு இணையாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொழில் முனைவோர் அதிகரித்து வருகின்றனர். நடப்பாண்டிலும் ஏராளமானோர் தொழில் முனைவோராக மாறி சாதனை புரிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஓராண்டில் 192 புதிய தொழில் முனைவோரை உருவாக்கி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: