அச்சத்தில் தங்கச்சிமடம் கிராம மக்கள் வெடிகுண்டுகளை அகற்றாததால் வீட்டை காலி செய்தார் மீனவர்

ராமேஸ்வரம்: தோட்டத்தில் எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் அகற்றப்படாததால் மீனவர் வீட்டை காலி செய்தார். உயிருக்கு ஆபத்துள்ளதால் வெடிபொருட்களை உடனடியாக அகற்ற அப்பகுதி மக்களும் வலியுறுத்தி உள்ளனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் வீட்டு தோட்டத்தில், கடந்த ஜூன் 25ம் தேதி செப்டிக் டேங்க் அமைக்கும் பணியின்போது துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணி வெடிகள், ராக்கெட் லாஞ்சர் பொறி கருவிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் நவீனரக துப்பாக்கி தோட்டாக்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வெடிபொருட்கள் தோண்டி எடுத்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஆயுதம் ஏந்திய போலீசார், தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிபொருட்களை அழிக்க சென்னையிலுள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சில வெடிதுகள்களை சேகரித்து சென்றனர். சோதனைக்குப்பின் அறிக்கை அளித்துள்ள நிலையில், வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கு அனுமதி வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிபொருட்கள் எடுக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகி விட்டதால், அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் தோட்டத்தை சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அழுத்தம் ஏற்பட்டால் கூட வெடிக்கும் தன்மையுள்ள கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள், ராக்கெட் லாஞ்சர் பொறி கருவிகள் போன்றவை உள்ளது. இவை வெடித்தால் பெரும் சேதம் ஏற்படும் என்று வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வெடிபொருட்களை அகற்றாமல் காலம் கடத்தி வருவதால் குழந்தைகளுடன் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எந்நேரம் வெடிக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். உடனடியாக வெடிபொருட்களை பாதுகாப்பாக அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதனிடையே வெடிபொருட்கள் எடுக்கப்பட்ட தோட்டத்தில் குடியிருக்கும் மீனவர் எடிசன், வேறு வழியின்றி நேற்று வீட்டிலிருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றார். வெடிபொருட்கள் அகற்றிய பிறகு மீண்டும் வீடு திரும்ப முடிவு செய்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: