ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்:அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

கோவை: ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என கோவையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தொழிற்துறை வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் நேற்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் அதிகாரிகள், தொழில்துறையினர்  கலந்துகொண்டனர். கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:இந்த கொரோனா காலத்தில் தொழில் துறையினர் நிலை என்ன? இந்த காலத்தில் தொழில்துறையினருக்கு உள்ள சவால்கள் என்ன? இதில் இருந்து எவ்வாறு மீள்வது, மீண்டும் எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது? என்பதை ஆலோசிக்க வேண்டி உள்ளது.தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட சில துறைகளில் மிக வலுவாக உள்ளோம். ஒரு காலத்தில் கோவை மாவட்டம் ஜவுளி உற்பத்தி மட்டுமே பிரதானமாக இருந்தது. இப்போது பல்வேறு தொழில் முனைவோர்கள், தற்கால தொழிற்நுட்ப உற்பத்திகளை செய்து வருகிறது. இளம் தொழில் முனைவோர்களின் ஆலோசனைகளில் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசின் தொழில் துறை முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. இதில் இது வரை நீண்ட ஆண்டுகளாக தொழில் துறையில் உள்ளவர்களை பாதுகாப்பது, ஊக்கப்படுத்துவது. மற்றொன்று புதிதாக தொடங்குவோறுக்கு தேவையான வசதிகள், புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் அனைத்து நிறுவனங்களும் சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே வருகிறது. பிற மாவட்டங்களில் இந்த அளவிற்கான முதலீடு வருவது இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலீடுகள் வர என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார்கள். அதேபோல் தூத்துக்குடி தொழில் பூங்கா என்ன ஆயிற்று என கேட்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அவை நிறைவடைந்தால் கோவை மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சியடையும். தமிழக அரசு இந்த மாதிரியான கூட்டங்களை நடத்துவது நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை காட்ட அல்ல, தொழில்துறையினர் கருத்து என்ன?, தேவை என்ன? என்பதை கண்டறியவே நடைபெற்று வருகிறது. அதே போல் கொரோனாவிற்கு பின் பல்வேறு தொழில் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.தற்போது அரசு மிகவும் பொறுப்புள்ள அரசாக செயல்பட்டு வருகிறது, அதனால் தான் ஒவ்வொரு துறையின் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்கிறோம். தடுப்பூசி செலுத்துவதில் கோவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீண்ட கால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் இந்த அரசு முனைப்பாக உள்ளது. கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்….

The post ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்:அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: