ஊரடங்கு தளர்வில் பஸ்கள் இயக்க அனுமதி: சேலம், நாமக்கல் மாவட்ட பணிமனைகளில் பஸ்களை தயார்படுத்தும் பணிகள் மும்முரம்..!

சேலம்: ஊரடங்கு தளர்வில் சேலம், கோவை உள்பட 11 மாவட்டங்களில் பஸ்களை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, பணிமனைகளில் பஸ்கள் தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2வது அலை பரவியது. தொற்றை கட்டுப்படுத்த கடந்த மே 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம், கோவை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையவில்லை. இதன் காரணமாக 11 மாவட்டங்களை  தவிர, மற்ற 27 மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவக்குழுவினருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதில் 11 மாவட்டங்களிலும் கொரோனா ெதாற்று குறைந்து வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் நாளை (5ம் தேதி) முதல் பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பணிமனைகளில் பஸ்கள் பராமரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  இது குறித்து சேலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங் களில் ஆயிரத்து 975 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் கடந்த 2 மாதமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 29ம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பால், பஸ்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கொரோனா ெதாற்று குறைந்து வருவதால், நாளை (5ம் தேதி) முதல் பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், சேலம், நாமக்கல் உள்ள பணிமனைகளில் பஸ்கள் பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பஸ்சில் ஹெட்லைட், பிரேக், இன்ஜின் ஆயில் மாற்றுவது, இருக்கை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வது, பஸ் முழுவதும் சோப்பு போட்டு துடைப்பது உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை காலை 6 மணி முதல் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். டிரைவர், கண்டக்டர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும். டிரிப்புக்கு ஒருமுறை பஸ்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்….

The post ஊரடங்கு தளர்வில் பஸ்கள் இயக்க அனுமதி: சேலம், நாமக்கல் மாவட்ட பணிமனைகளில் பஸ்களை தயார்படுத்தும் பணிகள் மும்முரம்..! appeared first on Dinakaran.

Related Stories: