×

உரிய நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பயணியை கடத்தி சென்ற ஆம்னி பேருந்து டிரைவர்: போலீசார் விசாரணை

புழல், ஜூன் 4: உரிய நிறுத்தத்தில் இறக்கி விடாமல் ஆம்னி பேருந்தில் பயணி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலிக்கு சென்றார். பின்னர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு ஆம்னி பேருந்தில் சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் அதிகாலை கோயம்பேடு அருகே வந்தபோது, சந்திரன் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட மறுத்து, அதற்கு முன்பாக சுமார் ஒரு கிமீ தொலைவில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட டிரைவரும், உதவியாளரும் முயற்சித்தனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால், சந்திரன் மன உளைச்சல் அடைந்தார்.

இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு செல்போன் மூலம் டிரைவர் தகவல் தெரிவித்தார். அதற்கு அவர், அந்த பயணியை தங்களிடத்துக்கு அழைத்து வரும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்திரனை இறக்கிவிடாமல், சென்னை புறநகர் பகுதிக்கு பஸ் விரைந்தது. இதையறிந்ததும் பேருந்தில் இருந்தபடியே சந்திரன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ராஜமங்கலம் போலீசார் விரைந்து வந்து, ஆம்னி பேருந்தை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். எனினும் பேருந்து நிற்காமல் புழல் பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதையடுத்து, போலீசார் பேருந்தை விரட்டி சென்று, புழல் காவல் நிலையம் அருகே மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து, புழல் போலீசில், குறிப்பிட்ட நிறுத்தத்தில் தன்னை இறக்கிவிடாமல், தட்டி கேட்ட ஆத்திரத்தில் தன்னை ஆம்னி பேருந்தில் கடத்தி சென்றதாக சந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து உரிமையாளர், டிரைவர் மற்றும் சிலரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post உரிய நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பயணியை கடத்தி சென்ற ஆம்னி பேருந்து டிரைவர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Dinakaran ,
× RELATED காரனோடை – ஜனப்பசத்திரம் இடையே ஜல்லி...