உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு

 

தர்மபுரி, ஜூலை 11: நல்லம்பள்ளி வட்டாரங்களில் உள்ள உரக்கடைகளில், வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ரேட்டால் என்ற எலி மருந்து, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எலி மருந்து உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் விஜயா கூறியதாவது: ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து, ஒன்றிய மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தர்மபுரி மாவட்ட மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளிலும், இந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது. அதேபோல, பொதுமக்களும் இந்த மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இம்மருந்து விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிய வேளாண் துறையையும் உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மாவட்டத்தில் யாரேனும் ”ரேட்டால்” மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரேனும் இந்த மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்ளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: