திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பாமக தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

திண்டிவனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திண்டிவனத்தில் பாமக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன, பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மற்றும் கரூரில் பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், பாமக சார்பில் திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஏறி அக்கட்சி தொண்டர் இருவர் முழக்கமிட்டபடியே போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் போராட்டக்களத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: