ஈரோடு, நவ.27: ஈரோட்டில் காலாவதியான மாத்திரைகளை சாக்கடையில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே வ.உ.சி. விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் ஏபிடி சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள சாக்கடையில் நேற்று காலை குவியல் குவியலாக மாத்திரைகள் வீசப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாத்திரைகளை கைப்பற்றி சோதனை செய்ததில், அது காலாவதியான மாத்திரைகள் என்பது தெரியவந்தது.
இந்த மாத்திரைகள் மருந்தகம் அல்லது மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டு, காலாவதியானதும் சாக்கடைகளில் வீசி சென்றனரா? தனிநபர் யாரேனும் சாக்கடையில் காலாவதியான மாத்திரையை வீசி சென்றனரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலாவதியான மருந்து, மாத்திரைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். சாக்கடையில் வீசி செல்வது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஈரோட்டில் காலாவதியான மாத்திரைகளை சாக்கடையில் வீசினால் அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.