இ-பாஸ் கட்டாயம், தேர்தல் கெடுபிடியால் ஜவுளி சந்தையில் விற்பனை பாதிப்பு

ஈரோடு: தேர்தல் கெடுபிடி மற்றும் இ-பாஸ் கட்டாயம் காரணமாக, ஈரோடு ஜவுளி  சந்தையில் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை நடக்கும். இந்த சந்தையானது  ஈரோட்டில் கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் கூடும். இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து மொத்தமாக ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து செல்வர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கையில் எடுத்து செல்லக்கூடாது எனவும், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்தால் இ-பாஸ் கட்டாயம் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற கெடுபிடியால் இந்த வாரம் கூடிய ஈரோடு ஜவுளி சந்தையில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் பெரும்பாலனோர் வரவில்லை. இதனால், மொத்த விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டதால், ஜவுளி சந்தை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தாலும், ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரிகள் எடுத்து சென்றால், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக என கருதி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விடுகின்றனர். இதற்கு பயந்து பெரும்பாலான வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு கடநத் வாரமே வரவில்லை. தற்போது, இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் கேரளா, மகாராஷ்டிரா வியாபாரிகள் முற்றிலுமாக வரவில்லை. இதனால், இந்த வாரம் கூடிய சந்தையில் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மாவட்ட சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். தேர்தல் முடியும் வரை இந்த கெடுபிடிகள் தொடரும் என்பதால், கோடை சீசன் விற்பனை முற்றிலும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post இ-பாஸ் கட்டாயம், தேர்தல் கெடுபிடியால் ஜவுளி சந்தையில் விற்பனை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: