இலவம்பாடி முள்கத்திரிக்காய்… ரூ.2லட்சம் வருவாய்…

தினசரி ஒரு டன் அறுவடைவேலூர் சுற்றுப்பகுதியில் இலவம்பாடி கத்திரிக்காயின் சுவை, பொது மக்களிடம் சிறப்பான சந்தையை ஏற்படுத்தி தந்துள்ளது. ஈச்சங்காடு, பொய்கை, புதூர், முஞ்சூர்பட்டு, கணியம்பாடி,  ஒடுகத்தூர், பின்னத்துறை, புலிமேடு அணைக்கட்டு தாலுகாவில் பரவலாக பயிரிடப்படுவதால் அதன் பெயர் இலவம்பாடி முள்கத்திரி என்பதாகும்.குறிப்பாக இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாமந்திமலர் சாகுபடிக்கு அடுத்தபடியாக கத்திரி சாகுபடிதான் பிரதானமாக இருந்து வருகிறது. இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பல தலைமுறையாக முள் கத்திரி சாகுபடியினை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஒருமுறை விளையக்கூடிய கத்திரிக்காயில் இருந்து நல்ல கத்திரிக்காயைப் பிரித்து அதிலிருந்து விதை எடுத்து கத்திரிக்காய்களை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்கச் செல்பவர்கள் கத்திரிக்காய் வாங்கும் போது இலவம்பாடி கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கும் அளவுக்கு இதன் பெயர் பிரபலமானது. அதேபோன்று, வெளியூர்களில் இருந்து வேலூர் வருபவர்கள்  இலவம்பாடி முள்கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி செல்வதை காண முடியும்.ஆவணி முதல் தை மாதம் வரை அதிகளவில் இந்த வகை கத்திரிக்காய் விளைச்சலைத் தரக்கூடியது. நாற்று நட்டு 45 நாட்கள் கழித்து காய்க்கத் தொடங்கும். தொடர்ந்து ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை செடிகளில் அறுவடை செய்யலாம். முள்கத்திரியின் பல்வேறு ரகங்களை விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அரிமலை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயி கோபி இலவம்பாடி முள் கத்திரிக்காய் பயிரிட்டு வருகிறார். இதன் மூலம் வாரத்திற்கு ரூ.1.40 முதல்ரூ.ரூ.2 லட்சம் வரையில் விவசாயி சம்பாதிப்பதாக தெரிவிக்கிறார். விவசாயி கோபியிடம் பேசினோம். ‘‘அரிமலை கிராமத்தில் 5 ஏக்கரில் முள் கத்திரிக்காய் போட்டு இருக்கேன்.  3 ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் முறையிலும், 2 ஏக்கரில் பாசன முறையில் முள் கத்திரிக்காய் பயிரிட்டுள்ளேன். தினமும், 700 கிலோ முதல் 1 டன் வரை கத்திரிக்காய் அறுவடை செய்யப்படுகிறது.ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்வதன் மூலம் 2 டன் வரை கத்திரிக்காய் கிடைக்கிறது. வேலூர் மார்க்கெட்டிற்கு ஒரு கிலோ ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு வாரத்திற்கு ரூ.1.40 லட்சம் வருவாய் கிடைக்கிறது. கத்திரிக்காய் விலை உயர்ந்தால் வருவாய் அதிகமாக கிடைக்கும். தற்போது, கிலோ ரூ.20க்கு விற்பனை செய்வதால், குறைந்த அளவிலான லாபம் வருகிறது.  வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யவும், வீட்டு விசேஷங்களுக்கு தேவையான இலவம்பாடி முள் கத்திரிக்காய் கேட்டாலும், அவர்களுக்கு மொத்தமாகவும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறோம் என்கிறார். தொடர்புக்கு:கோபி – 94446-21622புவிசார் குறியீடு வேண்டும். உற்பத்தி பொருட்களுக்கும், வேளாண் விளை பொருட்களுக்கும் கலை படைப்புகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இக்குறியீட்டை பெற்றால் சம்பந்தப்பட்ட பொருளை சுலபமாக லாபகரமாக சந்தைப்படுத்த முடியும். இதனால் தான் புவிசார் குறியீடு கோரி அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அந்த வகையில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கும் புவிசார் குறியீடு வாங்குவதற்கான முயற்சிகளில் வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தொகுப்பு: ரா.மதன்குமார்   படங்கள் : வே.ஸ்ரீதர்

The post இலவம்பாடி முள்கத்திரிக்காய்… ரூ.2லட்சம் வருவாய்… appeared first on Dinakaran.

Related Stories: