இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 23: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (24ம் தேதி) 4 இடங்களில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் குறித்து, கலெக்டர் சரயு தலைமையில் காணொளி காட்சி வாயிலாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (24ம் தேதி) நடைபெறவுள்ளது. மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் காமராஜ் காலனி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இதில், ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் சிகிச்சை, பொது மருத்துவம், இசிஜி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்படவுள்ளது. இம்முகாமில் மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளையும், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) வேடியப்பன், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்கமார், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் சையதுஅலி மற்றும் ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, பிடிஓ.,க்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: