பண்ருட்டி, ஆக. 29: பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு, சின்னபுறங்கணி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டு இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டு இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடவும், பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அரசே சொந்தமாக கட்டித்தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று சவப்பாடை ஊர்வலம் காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகர், மாவட்ட விவசாய சங்க தலைவர் சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், தனபால், லட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்கள் மணிவண்ணன், வெங்கடேசன் மற்றும் கலைராஜா, பாலச்சந்தர், தணிகாசலம், மகாலிங்கம், குப்புசாமி, துளசி மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்து பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பண்ருட்டி காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் வருவாய் துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் மேற்படி சுடுகாட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சவப்பாடை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.