ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 12: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 17 பள்ளி விடுதிகள் மற்றும் 2 கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில், 2023-2024ம் கல்வியாண்டில் ஏற்படுகின்ற காலியிடங்களுக்கு புதியதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும் மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோ மீட்டர் நிபந்தனை மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தாது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி மற்றும் 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.

இவ்விடுதிகளில் சேர விரும்பும் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் காப்பாளர்களிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பெறலாம். விண்ணப்பப் படிவத்தில் கோரியுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 30ம் தேதிக்குள் காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், விடுதி மேலாண்மை திட்டம் tnadw.hms.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: