கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மைசூர்: தொடர் மழையினால் கர்நாடக கே.ஆர்.எஸ் அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து 20,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே கபினி அணையில் இருந்து 45,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. புதிதாக திறந்துவிடப்பட்ட நீர் பிலிகுண்டுலு வழியாக இன்று அல்லது நாளைக்குள் ஒகேனக்கல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, மைசூர், மண்டியா, சாம்ராஜ்நகர், சிக்மங்களூரு போன்ற மாவட்டங்களில் கனமழையானது பதிவாகி இருந்தது. இந்த மழையின் காரணமாக காவிரி நதியின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று கே.ஆர்.எஸ் அணை கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் தற்போதைய நிலவரப்படி 123 அடி நீர் உள்ளது. அணைக்கு 42,000 கனஅடி நீர் வந்துகொண்டுள்ள நிலையில் அணை அபாயகட்டத்தை எட்டியுள்ளதால் 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் ஒக்கேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை இல்லாமல் வறட்சி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்டவில்லை. கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தான் கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு மீண்டும் கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. இன்று மாலைக்குள் கே.ஆர்.எஸ்  அணையிலிருந்து மேலும் 20,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தினால் காவிரி நதி செல்லும் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: