ஆடி 4ம் வெள்ளி திருவிழா அண்ணாமலையார் கோயிலில் திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, ஆக.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி 4ம் வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. மேலும், பச்சையம்மன் கோயிலில் நடந்த விழாவில் அன்ன வாகனத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார்சாமி கோயிலில் நடைபெறும் ஆடி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பானது. அதன்படி, ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, பச்சையம்மன் பவனி வந்து அருள்பாலிக்கிறார். அதன்படி, ஆடி மாதம் 4ம் வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் பச்சையம்மன் ேகாயிலில் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

தொடர்ந்து, நேற்று இரவு அன்ன வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், வரும் 16ம் தேதி ஆடி 5ம் வெள்ளியன்று ரிஷப வாகனத்தில் பச்சையம்மன் பவனி வருகிறார். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் ஆடி 4ம் வெள்ளியை முன்னிட்டு, கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது, பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜையில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post ஆடி 4ம் வெள்ளி திருவிழா அண்ணாமலையார் கோயிலில் திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: