ஆகாய தாமரையால் மூடி கிடக்கும் முத்தண்ண குளம்

 

கோவை, அக்.7: கோவை தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ண குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டது. கரைகள் பலமாக்கப்பட்டு பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடும் திடல், வாக்கிங் ஏரியா போன்றவை உருவாக்கப்பட்டது. ஆனால், குளத்தில் உள்ள நீரை சுத்தமாக்க, கழிவுகளை அகற்றி சுத்திகரிக்க போதுமான முயற்சி எடுக்கவில்லை. முத்தண்ண குளத்தின் மேல் பகுதியில் நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளங்கள் இருக்கிறது.

இந்த குளங்கள் நிரம்பிய பின்னரே முத்தண்ண குளத்திற்கு நீர் வருகிறது. தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு, சொக்கம்புதூர் உள்பட பல்வேறு பகுதி சாக்கடை நீர் முத்தண்ண குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது. இந்த அசுத்த நீரால் முத்தண்ண குளம் கெட்டு போய் நாறி கிடக்கிறது. இந்த குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தும் குளத்தில் வீசும் துர்நாற்றம் தடுக்க மாநகராட்சி தவறி விட்டதாக அந்த பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாய தாமரை மூடி கிடக்கிறது. இதனால் நாற்றம் மேலும் அதிகமாகி விட்டது. இந்த ஆகாய தாமரைகளை அகற்றி கழிவு நீரை சுத்தம் செய்ய வேண்டும். இந்த குளத்தின் உபரி நீர் தான் செல்வசிந்தாமணி குளத்திற்கும், உக்கடம் பெரிய குளத்திற்கும் விடப்படுகிறது. எனவே தொடர் இணைப்பில் உள்ள குளங்களை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என தடாகம் ரோடு மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post ஆகாய தாமரையால் மூடி கிடக்கும் முத்தண்ண குளம் appeared first on Dinakaran.

Related Stories: