நாகர்கோவில் கல்லூரிக்குள் சிறுத்தை புகுந்ததா?: தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் - பரபரப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சமீப காலமாக மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் புலி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதை பார்த்ததாக பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். செண்பகராமன்புதூர், கீரிப்பாறை, பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் ஆடு மாடுகள் கடித்து குதறப்படுவது, கோழிகள் மாயமாவது, கால்தடம் என வன விலங்குகள் பீதி பொது மக்களை வாட்டி வருகிறது. இதுவரை காட்டுவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவிய இடங்கள் அனைத்தும் மலையடிவார பகுதிகளாகும். ஆனால் தற்போது நகர பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளது. நாகர்கோவில் இந்து கல்லூரி வளாகம் பல ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கட்டிடங்களை சுற்றிலும் உள்ள பரந்துவிரிந்த நிலபரப்பில் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் உள்ளன.

பல இடங்களில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இங்குள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் குத்தகையை தெற்குசூரங்குடியை சேர்ந்த குஞ்சரராஜ் எடுத்துள்ளார். இந்த நிலையில் தேங்காய் பறிப்பதற்காக இன்று காலை தொழிலாளர்கள் வந்தனர். இதற்காக காலை 7 மணியளவில் வடக்கு வாசல் அருகே தென்னை மரங்களுக்கு இடையில் உள்ள புதர்களை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அடர்ந்து வளர்ந்து நின்ற புதர்களுக்கு இடையில் இருந்து சுமார் 3 அடி நீளமும், 2 அடி உயரமும் உடைய விலங்கு ஒன்று சீறிப்பாய்ந்து ஓடியது. இதை பார்த்த தொழிலாளர்கள் அது சிறுத்தை என கூறிக்கொண்டு அலறியடித்து ஓடினர். அதை பார்த்து பீதியடைந்த தொழிலாளர்கள் கல்லூரி முதல்வர் சிதம்பரதாணுவிடம் தெரிவித்தனர். தொடர்ந்து  மாவட்ட வன அலுவலர் ஆனந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 உடனடியாக உதவி வன அலுவலர் ஷாநவாஷ்கான், ரேஞ்சர் திலீபன் உள்பட வனத்துறையினர் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். கல்லூரி வளாகம் முழுவதும் சல்லடை போட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது கல்வியியல் கல்லூரி கட்டிடத்தின் தெற்கு பகுதியில் சில கால் தடங்கள் பதிவாகி இருந்தன. அது சிறுத்தையின் கால் தடம் என தொழிலாளர்கள் கூறினர். ஆனால், கால்தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் இது சிறுத்தையின் கால்தடம் அல்ல காட்டு பூனையின் கால்தடம் என கூறினர். தொடர்ந்து அதை பதிவு செய்து ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

இது குறித்து கல்லூரி பேராசிரியர் பார்த்திபன் கூறியதாவது: நான் ஏற்கனவே புலிகள் கணக்கெடுப்பில் தன்னார்வலராக சென்றுள்ளேன். சிறுத்தை, புலி என ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனி கால் தடம் உள்ளது.

இங்கு பதிவாகி இருப்பது காட்டுப்பூனையின் கால்தடம் தான். அதுமட்டுமல்ல காட்டில் வாழும் சிறுத்தை போன்ற விலங்குகள் இவ்வளவு தூரத்தை கடந்து இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார். காட்டுப்பூனையாக இருந்தாலும் கூட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இருப்பது அந்த பகுதி முழுவதும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் தேடும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பீதி வேண்டாம்... சம்பவ இடத்தில் வருவாய்த்துறை சார்பில் விஏஓக்கள் நாகேஷ்வர காந்த், மோகன் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள் மூலம் தகவல் வேகமாக பரவியதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கல்லூரி வளாகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 காட்டு பூஜைகள் உயிரிழந்து கிடந்துள்ளன. எனவே தற்போது பீதியை ஏற்படுத்திய மர்ம விலங்கு காட்டு பூனைதான் என்பது உறுதியாகி உள்ளது. காட்டு பூனைகளால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லூரிக்கு விடுமுறை: கல்லூரி வளாகத்தில் சிறுத்தை புகுந்துள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்லூரியின் அனைத்து வகுப்புகளும் உடனடியாக பூட்டப்பட்டன. அந்த மர்ம விலங்கு காட்டு பூனைதான் என வனத்துறையினர் மற்றும் போலீசார் உறுதி செய்ததை தொடர்ந்து, வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல நடைபெற்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: