ஈரோடு, ஜன.31: அரசு சேவைகள் மக்களை முழுமையாக சென்றடைவதை ஆய்வு செய்ய, ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்ட முகாம் கோபியில் இன்று (31ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
இத்திட்டத்தினப்டி, ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா(வட்டம்)அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, அரசு துறைகளின் சேவைகள் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, ஈரோடு கலெக்டா் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இன்று(31ம் தேதி) காலை 9 மணி முதல் மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.
கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். மேலும், இன்று (31ம் தேதி) மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை மணி வரை கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கு உண்டான தீர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அரசு சேவைகள் பொது மக்களை அடைய ‘உங்களை தேடி, உங்கள் ஊர்’ திட்ட முகாம் கோபியில் இன்று நடக்கிறது: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.