நாங்குநேரி: பச்சையாறு அணைக்கட்டு பாசனத்தில் 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தனிக்கால்வாய் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் வடகிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் அதிகப்படியான நீரை சேமிக்கும் வகையில் களக்காடு அருகே மலை அடிவாரத்தில் மஞ்சுவிளை கிராமத்தில் பச்சையாற்றின் குறுக்கே கடந்த 1998ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது வடக்கு பச்சையாறு அணை கட்டும் திட்டம் துவங்கியது.
50 அடி கொள்ளளவு கொண்ட அணை 3110 மீட்டர் நீளம் மண் அணை, கல்லணையுடன் கூடியது. நீர்த்தேக்கம் 20.20 மீட்டர் உயரத்தில் 442 மில்லியன் கன அடி கொள்ளளவில் கட்டப்பட்டது. கடந்த 2004ல் இந்த அணை பொது பயன்பாட்டுக்கு வந்தது. இதுவரை 2009, 2014, 2015, 2019 ஆகிய வருடங்களில் முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பரப்பு 184.52 ஹெக்டர் ஆகும். மொத்த கொள்ளளவு 12.506 மி.கனமீட்டர். அணைக்கு தலையணை, தேங்காய் உருளி, ஊட்டுக்கால்வாய் மூலமாகவும், நீர்பிடிப்பு பகுதிக்கு கீரைக்காரன் கால்வாய் மூலமாகவும் நேரடியாக தண்ணீர் வருகிறது.
களக்காடு வட்டாரத்தில் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறுகின்றன. பச்சையாறு அணைக்கட்டு திட்ட கட்டுமானத்தில் இரு பிரிவுகளாக கையாள திட்டமிடப்பட்டது. அணைக்கட்டு ஒரு பகுதியாகவும், அணைக்கு வெளியே நேரடி கால்வாய் திட்டம் மற்றொரு பகுதியாகவும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அணைக்கட்டு பணிகள் முடிந்ததும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் நேரடி தனிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்குநேரி தாலுகா விவசாய சங்க செயலாளர் கணேசன் கூறுகையில், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்து ஒவ்வொரு குளமும் நிரம்பியபின் உபரிநீர் மதகு வழியே அடுத்த குளத்திற்கு செல்லும் பழைய பாசன முறையே நடைமுறையில் உள்ளது. இதனால் கடைசியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது அல்லது கிடைப்பதில்லை. இதனை மாற்றி விரைவாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கிட முக்கிய கால்வாயான நாங்குநேரியான் கால்வாயில் இருந்து ஒவ்வொரு குளத்திற்கும் தனித்தனி கால்வாய் வெட்டி, முறை வைத்து தண்ணீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக அப்போது சுமார் ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அத்திட்டம் செயல்பாட்டுக்கு வராததால் பழைய முறைப்படியே குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பச்சையாறு அணைக்கட்டு பாசனத்தில் மேற்கு பகுதியிலுள்ள குளங்கள் அதிகம் பலன் பெறுகின்றனர். நாங்குநேரி பெரியகுளம், அதன் கீழுள்ள வில்வராயர்குளம், அரையர்குளம், சிங்கநேரிகுளம், காரங்காடுகுளம், இறைப்புவாரி குளம், நெடுங்குளம், ஏமன்குளம், பரப்பாடிகுளம், பாப்பான்குளம், பிள்ளைகுளம், உன்னங்குளம், அரியகுளம் உள்ளிட்ட சுமார் 146 சிறு குளங்களுக்கு முறையாக மலையிலிருந்து வரும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டியபின் தன்கால் பாசனம் போக ஏராளமான தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு தாமிரபரணி மூலம் ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கிறது. தனிக்கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டிருந்தால் வீணாகும் தண்ணீர் குளங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும்.
நாங்குநேரி வட்டத்தில் போதிய மழை இல்லாததால் தண்ணீர் வரத்தின்றியும் தனிக்கால்வாய் வசதி இல்லாததாலும் ஏராளமான குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எப்படியும் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து, விலை கொடுத்து நெல் விதை வாங்கி நாற்றாங்கால் அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் குளங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் என்ன செய்வதென்று குழப்பத்தில் உள்ளனர் என்றார்.