அடிச்ச மழையில் தண்ணியும் நிக்கல; எதிர்க்கட்சியின் விமர்சனமும் நிக்கல என கூறும் அளவுக்கு முதல்வர் பணி உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

பெரம்பூர்: அடிச்ச மழையில் தண்ணியும் நிக்கல… எதிர்க்கட்சியின் விமர்சனமும் நிக்கல என கூறும் அளவிற்கு முதல்வரின் பணி சிறப்பாக உள்ளது என புளியந்தோப்பில் நடந்த நிகழ்ச்சியில்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி பல கட்டங்களாக திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு டான் பாஸ்கோ விளையாட்டு திடலில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினார். திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:சின்னவர் என்பதைவிட எங்களை வழி நடத்தும் அடுத்தவரின் பிறந்தநாளை  இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். கடனை  வாங்கி பெரும் நிகழ்ச்சிக்களை நடத்துவதைவிட சிறுநிகழ்ச்சியாக இருந்தாலும் சின்சியராக செய்யுங்கள் என இளைஞரணி செயலாளர் கூறினார். அதேபோன்று நம்முடைய பண்பாட்டை வெளிப்படுத்துகின்ற அளவில் இந்த விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கெல்ஹோ இந்தியா என்ற திட்டத்தில் சிலம்பாட்ட போட்டி என்பது இடம் பெறாமல் இருந்தது. சிலம்பாட்டத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தபோது சிலம்பாட்டத்தை கெல்ஹோ இந்தியா என்ற திட்டத்தில் முதல்வர் முயற்சியால் சிலம்பாட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் திராவிட மாடல் ஆட்சி என்பதை  நிரூபித்துக்கொண்டிருக்கிறது.இன்று பலமாற்றங்களை விளையாட்டுத்துறையில் முதலமைச்சர் உருவாக்கிகொண்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும்  உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்  என முதல்வர் கூறியிருக்கிறார். தங்கப்பதக்கம் பெறுகின்ற போட்டியாளர்களுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு, வெள்ளிக்கு இரண்டு கோடி, வெண்கலத்திற்கு ஒரு கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வடசென்னைக்கு மட்டும் தனியாக 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு என முதல்வர் அறிவித்துள்ளார். விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. அடிச்ச மழையில் தண்ணியும் நிக்கல… எதிர்க்கட்சியின் விமர்சனமும் நிக்கல என்று கூறும் அளவிற்கு முதல்வரின் பணி சிறப்பாக உள்ளது. போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். இதேபோல் இளைஞரணி செயலாளரின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் இளைய சமுதாயத்தை முழுமையாக வழிநடத்துபவர் இளைஞரணி செயலாளர்தான். இவ்வாறு அமைச்சர் பேசினார்….

The post அடிச்ச மழையில் தண்ணியும் நிக்கல; எதிர்க்கட்சியின் விமர்சனமும் நிக்கல என கூறும் அளவுக்கு முதல்வர் பணி உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: