அக்.12ம் தேதி விழா உத்தரகாண்ட்டில் ரூ.4194 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்: ஜெகேஷ்வர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்

அல்மோரா: உத்தரகாண்டின் புகழ்பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ஜெகேஷ்வர் கோயிலுக்கு பிரதமர் மோடி வரும் 12ம் தேதி வருகை தர உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெகேஷ்வர் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. கடல் பரப்பில் இருந்து 6,200 அடி உயரத்தில் பதித் பவன் ஜடகங்கா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோயில்களில் தான் சிவபெருமான், சப்தரிஷிகள் தவம் இருந்ததாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஜெகேஷ்வர் கோயில்கள் கத்யூரி வம்ச மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவையாகும்.

இங்குள்ள 224 பண்டைய கோயில்களில் ஒன்றான இது அப்பிராந்தியத்தில் இயற்கையுடன் ஆன்மீகத்தை வழங்கி வருகிறது. இந்த கோயில்கள் ஒரு பெரிய கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயில்களின் கதவுகள் கடவுள்களின் சிற்ப வடிவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. காத்கோடம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஜெகேஷ்வர் கோயில்களை அடையலாம். டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையம், டேராடூனில் இருந்து ஹல்த்வானி செல்லும் பேருந்துகள் மூலமும் அல்மோராவை அடையலாம். அல்மோராவில் இருந்து டாக்சி மூலம் ஜெகேஷ்வர் கோயில்களுக்கு செல்லலாம். பிரதமர் மோடி உத்தரகாண்டில் உள்ள பித்ரோகர் மாவட்டத்துக்கு வரும் 12ம் தேதி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக வர உள்ளார்.

அங்கு அவர் புகழ்பெற்ற மயாவதி ஆசிரமத்தில் தங்க இருக்கிறார். அங்கிருந்து சீன எல்லையில் உள்ள ஆதி கைலாஷ் சென்று ஆசி பெறும் வாய்ப்பும் பிரதமர் மோடிக்கு உள்ளது. இது தவிர, பியாஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஜோலிகாங் செல்ல உள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதிகள் காண்போரின் நெஞ்சை கொள்ளை கொண்டு அழியா நினைவுகளை ஏற்படுத்தும். பிரதமர் மோடி மனஸ்கந்தாவின் மேம்பாட்டிற்காக ரூ.4194 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மோடியின் பயணம் எந்தவித தடையுமின்றி நல்லபடியாக அமைய அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர்.

The post அக்.12ம் தேதி விழா உத்தரகாண்ட்டில் ரூ.4194 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்: ஜெகேஷ்வர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: