×

அறிமுக அணியுடன் போனி பண்ணாத போர்ச்சுகல்: வரலாற்றில் முதல் கோல் போட்ட காங்கோ

டெக்சாஸ்: 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த குரூப் கே பிரிவு லீக் போட்டியில், அறிமுக அணியான காங்கோ குடியரசு, ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணிக்கு எதிராக களம் கண்டது. போட்டி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே போர்ச்சுகலின் ஜோவா நெவ்ஸ் தலையால் முட்டி முதல் கோலை பதிவு செய்தார். சமீபத்தில் காலமான டியாகோ ஜோட்டாவின் நினைவாக கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய நெவ்ஸ், இந்த கோலை அவருக்கு அர்ப்பணித்தார். ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+5வது நிமிடம்) காங்கோ அணியின் யோவான் விசாவும் தலையால் முட்டி ஒரு கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். உலகக்கோப்பை வரலாற்றில் காங்கோ அணி பெற்ற முதல் கோல் மற்றும் முதல் புள்ளி இதுவாகும்.

ஆட்டத்தின் 2வது பாதியில் போர்ச்சுகல் அணி தொடர்ந்து போராட, கத்துக்குட்டி காங்கோ அணி தனது பலமான தற்காப்பு அரணால் போர்ச்சுகல் வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்தனர். இருப்பினும், ஜான் கேன்சிலோ ஒரு கோல் அடித்தார். ஆனால், அது ஆப் சைடு கோல் என நடுவர்கள் அறிவித்ததால் கோலாக அங்கீகரிக்கப்படவில்லை. பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் கோல் அடிக்கத் திணறினார். இதன் மூலம் உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பை போன்ற முக்கிய சர்வதேச தொடர்களில் கடந்த 10 போட்டிகளாக அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை என்ற மோசமான சாதனையை தக்கவைத்துள்ளார். கடந்த 10 போட்டிகளில் அவர் 33 முறை கோல் அடிக்க முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

41 வயதான ரொனால்டோவுக்கு இது 6வது உலகக் கோப்பை தொடராகும். போர்ச்சுகல் அணிக்காக 229 போட்டிகளில் விளையாடி 143 சர்வதேச கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, உலகக் கோப்பையில் இதுவரை 8 கோல்களை மட்டுமே அடித்துள்ளார். மற்ற அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் ஆகியோர் இந்த தொடரின் முதல் ஆட்டத்திலேயே கோலை பதிவு செய்த நிலையில் ரொனால்டோ தனது கணக்கை தொடங்காமல் உள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அல்ஜீரியாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து உலகக் கோப்பையில் 16 கோல்களுடன் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், ரொனால்டோவின் இந்த பின்னடைவு அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. மேலும், ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனங்களையும் மீம்ஸ்-களையும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அவுட் பீல்ட் வீரர் புதிய சாதனை
உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக வயதில் (41 ஆண்டுகள் 132 நாட்கள்) தொடக்க வீரராக களம் கண்ட அவுட் பீல்ட் வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்து உள்ளார். இதன் மூலம் 2022 உலகக்கோப்பையில் கனடா வீரர் அதிபா ஹட்சின்சன் உருவாக்கிய சாதனையை ரொனால்டோ முறியடித்து உள்ளார்.

Tags : Portugal ,Congo ,Texas ,Group K group ,2026 FIFA World Cup football tournament ,Republic of Congo ,Ronaldo ,
× RELATED இங்கிலாந்திடம் குரோஷியா சரண்டர்: 4-2 என...