டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்த போட்டியில் குரூப் எல் பிரிவில் உள்ள குரோஷியா-இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 12வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கேப்டன் ஹாரி கேன் அடித்த பெனால்டி பந்தை குரோஷிய கோல்கீப்பர் தடுத்த போதிலும், அவர் கோடு தாண்டி முன்னால் வந்ததால் மீண்டும் பெனால்டி அடிக்க நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து கிடைத்த 2வது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திய கேன், இங்கிலாந்திற்கு முதல் கோல் பெற்று தந்து முன்னிலை பெறச் செய்தார்.
தொடர்ந்து, போட்டியின் 36வது நிமிடத்தில் குரோஷியாவின் மார்ட்டின் பாடுரினா ஒரு கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த 6 நிமிடங்களிலேயே டெக்லான் ரைஸ் வீசிய கார்னர் பந்தை ஹாரி கேன் தலையால் முட்டி கோலாக மாற்ற இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பையில் தனது 10வது கோலைப் பதிவு செய்த கேன், இங்கிலாந்துக்காக உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த கேரி லினேக்கரின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்தார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் குரோஷியாவின் பீட்டர் முசா ஒரு கோல் அடிக்க, 2-2 என சமன் ஆனது.
இதனால் 2வது பாதி ஆட்டம் தொடங்கியத்தில் சூடுபிடித்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க ஆர்வம் காட்டினர். 2வது நிமிடத்திலேயே (47வது நிமிடம்) இங்கிலாந்தின் இளம் நட்சத்திரம் ஜூட் பெல்லிங்ஹாம் அபாரமாக ஆடி கோல் அடிக்க இங்கிலாந்து 3-2 என முன்னிலை பெற்றது. அதன் பின்னர் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இங்கிலாந்து அணியில் மாற்று வீரராகக் களமிறங்கிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட் 85வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து 4-2 என்ற கணக்கில் பலம் வாய்ந்த குரோஷியாவை வீழ்த்தியது.
