×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 656 பேர் தேர்ச்சி பெற்று அசத்தினர்

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎப்எஸ்) உள்ளிட்ட உயர்நிலை குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2026ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1016 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 24ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 24ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் நடந்தது. முதல்நிலை தேர்வு காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக நடந்தது. காலையில் நடந்த பொது அறிவுத் தாள் கடினமாக இருந்ததாகவும், பிற்பகல் நடைபெற்ற திறனறித் தேர்வு ஒப்பீட்டளவில் எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inல் வெளியிட்டுள்ளது. மேலும், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வருகிற ஜூன் 19 முதல் 28ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 13,343 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 656 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 711 மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்குகிறது.

இத்தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு 24 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Union Public Service Commission ,UPSC ,Indian Administrative Service ,IAS ,Indian Police Service ,IPS ,Indian Foreign Service ,IFS ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள்...