×

விடுமுறை நாட்கள் 155 பள்ளிகளுக்கு 210 வேலை நாட்கள்: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 210 வேலை நாட்கள்; விடுமுறை நாட்கள் 155 என 2026-27ம் கல்வியாண்டுக்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தக் கல்வியாண்டுக்கு மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள். 22 நாட்கள் அரசு விடுமுறையுடன் சேர்த்து விடுமுறை நாட்கள் ெமாத்தம் 155. காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை. அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடத்தப்படும்.

டிசம்பர் 24ம் தேதி தொடங்கி ஜனவரி 4ம் தேதி வரை 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை. செப்டம்பர் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தியும் செப்டம்பர் 14ம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படுவதால், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையுடன் சேர்த்து இரண்டு முறை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அக்டோபர் மாதத்தில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், வார விடுமுறையுடன் சேர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகை 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

இந்தக் கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடைகிறது. 2027 ஏப்ரல் 24ம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும். இந்தக் கல்வியாண்டில் ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Department of School Education ,Chennai ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள்...