×

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ராஜினாமா விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மே 13ம் தேதி சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

அது நிலுவையில் இருந்த போது, மே 25ம் தேதி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோரும், மே 26ம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவிகளை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இடைத்தேர்தலில் நான்கு பேருக்கும் சீட் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் லாப நோக்குடன் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு நூறு கோடி ரூபாய் வரை அரசுக்கு செலவு ஏற்படும் என்பதால் லாப நோக்குடன் ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறிய நான்கு பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றனர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நாளிலேயே ஆளுங்கட்சியில் இணைந்த விஷயத்தில் பெருந்தொகை சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. தனிமனிதனாகிய மனுதாரரால் ஆதாரங்களை சேகரிக்க முடியாது என்பதால் சிபிஐ விசாரணை கேட்பதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,CBI ,Madras High Court ,Chennai ,High Court ,Ramkumar ,Tiruchendur ,
× RELATED ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட...