சென்னை: கரூரில் 41 பேர் பலியான நேரத்தில் எஸ்பியாக இருந்த ஜோஸ் தங்கையா, தண்ணியில்லா காட்டுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் கரூரில் பிரசாரத்துக்கு நடிகர் விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவ நேரத்தில் அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் என 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், தேர்தல் நேரத்தில் கரூர் எஸ்பியாக இருந்தவர் ஜோஸ் தங்கையா. இவர், தேர்தல் ஆணையத்தில் சம்பவ நடந்த சில நாட்களிலேயே மாற்றப்பட்டார். பின்னர் சென்னை மாநகர செக்யூரிட்டி பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென மாற்றப்பட்டார். அவர், ராமநாதபுரம் மாவட்டம் சக்காரக்கோட்டையில் உள்ள 12வது சிறப்பு பட்டாலியன் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
வழக்கமாக ஒரு அரசு தனக்கு வேண்டாத அதிகாரிகளை பழிவாங்க ராமநாதபுரம் மண்டபம் முகாமுக்கு மாற்றுவார்கள். தற்போது ஜோஸ் தங்கையாவை அப்படி மாற்றாமல், பட்டாலியனுக்கு மாற்றியுள்ளனர். கரூர் சம்பவ நேரத்தில் மத்திய மண்டல ஐஜியாக இருந்தவர் நிர்மல்குமார் ஜோஷி. இவர், திருச்சி டிஐஜி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். கரூர் சம்பவத்துக்குப்பிறகு அவர் சென்னை தலைமையிட கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது அவரும், ஈரோடு அதிரடிப்படைக்கு மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
