திருவாரூர்: திருவாரூர் அருகே கள்ளத்தொடர்பில் இருந்த அண்ணியை தன்னிடமிருந்து பிரித்ததால் செங்கல் வியாபாரியை கொலை செய்ததாக கைதான வக்கீல் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் திருமுகம்(50). செங்கல் சூளையில் செங்கல்லை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி சுதா(45), மகன் சுமன்(15), மகள் யாழினி(13) ஆகியோருடன் வீட்டில் தூங்கினார்.
அதிகாலை அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே புகுந்து திருமுகம், சுதா ஆகியோரை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதை தடுத்த சுதாவின் இடது கையில் வெட்டு விழுந்தது. இந்த சத்தம் கேட்டு 2 குழந்தைகளும் எழுந்தனர். அப்போது மனைவி, குழந்தைகள் கண் முன்னே திருமுகத்தின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டி சிதைத்து விட்டு 6 பேரும் தப்பி சென்றனர். இதில் அந்த இடத்திலேயே திருமுகம் இறந்தார். குடவாசல் போலீசார் திருமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருமுகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள் புதுக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 3 தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது குடவாசல் அடுத்த வடகண்டம் பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜா(38) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் ராஜா மற்றும் முகந்தனூரை சேர்ந்த கண்மணி(33), அம்மையப்பன் இளங்குடியை சேர்ந்த மணிகண்டன்(35), வடபாதிமங்கலத்தை சேர்ந்த தீபன்(30), சீராத்தோப்பை சேர்ந்த கண்ணன்(40), வடகரையை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் சேர்ந்து திருமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் ராஜா, கண்மணி, மணிகண்டன், தீபன் ஆகிய 4 பேரையும் நேற்று பகலில் கைது செய்தனர். கண்ணன், 17 வயது சிறுவனை மாலை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறுவனை தஞ்சை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 5 பேரையும் திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட திருமுகம், கைதான வக்கீல் ராஜா ஆகியோரின் தந்தைகள் சகோதரர்கள் ஆவர். கொலை செய்ய சென்ற 6 பேரில் வக்கீல் ராஜா தவிர, மற்ற 5 பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.
முன்னதாக போலீஸ் விசாரணையில் வக்கீல் ராஜா அளித்த வாக்குமூலம் வருமாறு: எனது அண்ணன் சரவணன்(40). அவரது மனைவி சூர்யா(35). வடகண்டத்தில் நாங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். சென்னையில் உள்ள தனியார் கம்பெனில் கெமிக்கல் இன்ஜினியராக சரவணன் வேலை பார்த்து வந்தார். எனக்கும், அண்ணி சூர்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்து என்னை கண்டிக்குமாறு, திருமுகத்திடம், அண்ணன் சரவணன் கூறியுள்ளார். அதன்படி என்னிடம் வந்து, உனது அண்ணன் சரவணன் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நீ இப்படி செய்யலமா… நீ செய்வது தவறு. சூர்யாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள் என்று திருமுகம் கூறினார். இதை நான் கேட்கவில்லை. இதனால் எனது அண்ணன் சரவணனை தொடர்பு கொண்டு, நான் சொல்வதை ராஜா கேட்கவில்லை. உனது மனைவியை நீ சென்னைக்கு அழைத்து சென்று விடு என்று திருமுகம் கூறியுள்ளார். அதன்பேரில் சென்னையில் வாடகை வீடு பார்த்து சூர்யாவை, எனது அண்ணன் அழைத்து சென்று விட்டார்.
இதனால் என்னால் சூர்யாவை சந்திக்க முடியவில்லை. இந்த ஆத்திரத்தில் திருமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி எனது கூட்டாளிகளான கண்மணி, மணிகண்டன், தீபன் உள்ளிட்டோருடன் சென்று திருமுகத்தை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
