* முகமூடி கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டும் ட்ரோன் கேமரா மூலம் பிடித்ததாக போலீஸ் நாடகம்-பொதுமக்கள் பீதி
நெல்லை: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் திருமண விழாவில் புகுந்தும், சாலையில் சென்றவர்களையும் அரிவாளால் வெட்டி வன்முறையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த 8 பேர் கும்பலில் 5 பேரை கைது செய்த போலீசார், 3 இளஞ்சிறார்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அதே ஊரைச் சேர்ந்த இருவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு 4 பைக்குகளில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த 12 பேர் ெகாண்ட கஞ்சா கும்பல் மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்த அருள்மாறன், அவரது தந்தை ரமேஷ், ராயப்பன், அனந்தபுரத்தை சேர்ந்த ராம்குமார், நெட்டூரை சேர்ந்த குமார், குலையநேரியை சேர்ந்த மேளக்கலைஞர் மாடசாமி (39) ஆகிய 6 பேரை அரிவாளால் வெட்டி விட்டு, மண்டபத்திலிருந்த சேர்கள் மற்றும் பேனர்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி விட்டு தப்பியது.
இந்த கும்பல் 100 அடி தூரத்தில் சென்றபோது வழியில் ஒரு பலசரக்கு கடை உரிமையாளர் குழந்தை தெரசாவை (49) மிரட்டி கடையை சூறையாடி, குளிர்சாதன பெட்டியை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி சாலையில் வீசி எறிந்துவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் பாளை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து நெட்டூர் பகுதி மக்கள் ஊத்துமலை – ரெட்டியார்பட்டி சாலையில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த தென்காசி எஸ்பி அசோக்குமார், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். வன்முறையில் ஈடுபட்ட முகமூடி கும்பல் யார் என அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது 4 பைக்குகளில் தலா மூவர் வீதம் 12 பேர் வந்து தாக்குதல் நடத்தி விட்டு பைக்கில் தப்பியது தெரியவந்தது. இந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் முகமூடி கும்பல் யார் என விசாரணை நடத்தினர். இந்நிலையில் அங்கிருந்த தப்பிய கும்பல் அப்பகுதி வழியாக மானூர் அருகே தெற்குப்பட்டிக்குள் பைக்கில் வேகமாக சென்றது. இதை ஊர் மக்கள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த முகமூடி கும்பல் பள்ளிவாசல் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த முபாரக் (30), அப்துல் ரஹுமான் (36) ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.
இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் 2 மாவட்டங்களில் முகமூடி அணிந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலை சுட்டுப்பிடிக்கவும் நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக இதே முகமூடி கும்பல் அம்பை அருகே பிரம்மதேசம் பகுதியில் கடந்த 28ம் தேதி மணிகண்டன் (29) என்பவரை நான்கு பைக்குகளில் வந்த 12 பேர் கும்பல் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வழிமறித்தது. அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வெட்டி விட்டு தப்பிச் சென்றது. அதே கும்பல் வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூடத்திற்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது.
அங்கு பணியாற்றியவர்களிடம் மூன்று செல்போன்களை பறித்துக் கொண்டு, வழியில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி மாடசாமி (32) என்பவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு பைக்குகளில் தப்பிச் சென்றது. இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு மானூர் அருகே உகந்தான்பட்டியில் காட்டுப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் தீவிரமாக தேடினர்.
மோப்பநாய் உள்ளிட்ட நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடியதில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள், நெட்டூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (19), மாரியப்பன் (20), பிரமுத்து (21) ஆகிய 6 பேரை மானூர் போலீசாரும், அம்பை. சம்பவம் தொடர்பாக பிரம்மதேசத்தை சேர்ந்த நவீன் (20), சஞ்சய் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் 3 இளஞ்சிறார்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்ற 5 பேரை பாளை. மத்திய சிறையிலும் அடைத்தனர்.
இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை நெல்லை, தென்காசி மாவட்ட போலீசார் கூட்டாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த சம்பத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்ட போதிலும், போலீசார் ட்ரோன் மூலம் கண்டுபிடித்து கைது செய்ததாக வீடியோ வெளியிட்டுள்ளனர். போலீசார் நாடகத்தை அரங்கேற்றியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த தொடர் வெட்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
* ரவுடிகள் ஒடுக்கப்படுவர்
இதற்கிடையே நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய வாகன சோதனைகள் நடந்து வருகின்றன. குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் பல்வேறு வழிகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ட்ரோன், மோப்ப நாய் படை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் விசாரணை மற்றும் தேடுதல் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், நெல்லை சரகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரவுடிகள் மற்றும் சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக செயல்படும் நபர்களுக்கு எதிராக ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகள் மற்றும் வழக்கமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தேவையான தடுப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறையினர் உறுதிபூண்டுள்ளனர். இவ்வாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.
* கைதான 8 பேர் உண்மை குற்றவாளிகளா?: ஜான்பாண்டியன் சந்தேகம்
ஆலங்குளம் அருகே நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அங்குள்ள மண்டபத்தில் ஊர் நாட்டாமைகள் அந்தோணி, பவுல், ஜெயராஜ், ஆல்பர்ட் தலைமையில் கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்களிடம் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் நேரில் சென்று இப்பிரச்னை தொடர்பாக கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது சந்தேகமாக இருக்கிறது. பிடிபட்டவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.
பின்னர் ஆலங்குளம் காவல் நிலையம் சென்ற ஜான்பாண்டியன், டிஎஸ்பி கிளாட்ஸ்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
* விழிக்காத போலீஸ்
அம்பாசமுத்திரம் வெட்டு சம்பவம் நடந்த உடனேயே முகமூடி கும்பலை உடனே அடையாளம் கண்டு போலீசார் பிடித்திருந்தால் நெட்டூர், மானூர் அரிவாள் வெட்டு சம்பவங்களை போலீசார் தடுத்திருக்கலாம். ஆனால் போலீசாரின் அலட்சியத்தால் இரு சம்பவங்களும் அரங்கேறி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
* மீண்டும் மீண்டும் வன்முறை
கடந்த 28ம் தேதி அம்பையில் வெட்டு, தொடர்ந்து ஆலங்குளம் நெட்டூர், மானூர் அருகேயுள்ள தெற்குப்பட்டி கிராமம் ஆகிய தொடர் வன்முறை சம்பவங்களால் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அமைதி இழந்து எப்போது எது நடக்குமோ என்ற பீதியில் உள்ளனர்.
* காரணம் என்ன?
ஆலங்குளம் அருகே நெட்டூரில் வடக்கு பஸ் நிறுத்தம் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்கள் உள்ளன. அதன் அருகே மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் தெருக்கள் இருக்கின்றன. இந்நிலையில் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் தெருவில் வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்ததால், வடக்கு பகுதி பஸ் நிறுத்தம் பகுதியில் மெயின்ரோட்டில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தினர் பேனரால் ஏற்பட்ட தகராறில் 12 பேர் அடங்கிய மூகமூடி கும்பல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
* குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
நெல்லை, தென்காசி மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள், போலீஸ் இன்பார்மர்கள் தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது யாரும் செல்போன்களை எடுப்பதில்லை. இதற்கு முன்பிருந்த போலீஸ் உயரதிகாரிகள், அதிகாரிகள் பெட்டிக்கடை, டீக்கடை, இன்பார்மார்கள் செல்போன்களில் தொடர்பு கொண்டால் உடனே எடுத்து உண்மைதானா என்று அறிய உளவுப்பிரிவை அனுப்பி விசாரிப்பர்.
இதைத் தொடர்ந்து தகுந்த ஏற்பாடுகள் செய்து குற்றங்களை தடுப்பர். நெல்லை மாவட்டத்தில் இதற்கு முன்பு எஸ்பியாக பணியாற்றிய கண்ணப்பன், ஆஸ்ரா கர்க் போன்றோர் இதற்கு உதாரணம். கள நிலவரத்தை அறிந்து அவர்கள் செயல்பட்டனர். ஆனால் தற்போதைய போலீஸ் அதிகாரிகளிடம் அதுபோன்ற செயல்பாடுகள் இல்லாதது தான் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
