×

கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று புதைத்த வாலிபர் கைது

திருமலை: கள்ளக்காதலியை அடித்தும், கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம் சவுரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷாலி (36). இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 18ம்தேதி குடிவாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு விஷாலி வீட்டிலிருந்து சென்றார். ஆனால் மீண்டும் திரும்பி வரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷாலியை தேடினர். விஷாலியின் மொபைல் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக சவுரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி பிரான்சிஸ் ஷவுரி(36) என்பவருடன் பேசியது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனிப்படை அமைத்து பிரான்சிஸ் ஷவுரியை தேடிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
விஷாலி குடும்பத்திற்கு பிரான்சிஸ் ஷவுரி ரூ.2 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அதற்கான வட்டியும் அவரது வீட்டுக்கே சென்று வசூலித்துள்ளார். அப்போது விஷாலியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. விஷாலி பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் ஷவுரி, விஷாலியிடம் ஏன் பலரிடம் செல்போனில் பேசுகிறாய் எனக்கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கடந்த ஏப்ரல் 18ம்தேதி பணம் கொடுப்பதாக கூறி விஷாலியை அனுமான் சந்திப்புக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற விஷாலியை, பல்லேர்லமுடி அருகே போலவரம் கால்வாய் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பைக்கில் அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் ஷவுரி, விஷாலியை சரமாரியாக தாக்கினார். மேலும் மறைத்து வைத்திருந்த கயிற்றால் விஷாலியின் கழுத்தை நெரித்தார். இதில் மயங்கி விழுந்த விஷாலி மீது பெரிய கருங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை புதரில் வீசிவிட்டு தலைமறைவானார். கொலை நடந்த 5 நாட்களுக்குப் பிறகு உடல் வீசிய இடத்திற்கு சென்ற பிரான்சிஸ் ஷவுரி, சந்தேகம் வராமல் இருக்க, அங்கேயே ஒரு பள்ளம் தோண்டி சடலத்தை புதைத்தார்.

இதற்கிடையில் விஷாலி உயிருடன் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதற்காக, விஷாலி போனிலிருந்து அவரது கணவருக்கு வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்துள்ளார். சில சமயங்களில் போன் செய்யும்போது ​​அவர் அதை எடுத்துவிட்டு அமைதியாக இருந்துள்ளார். இறுதியாக விஷாலி போன் தன்னிடம் இருந்தால் போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் பிரான்சிஸ் ஷவுரி போனை உடைத்து ஒரு குளத்தில் வீசினார். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார், பிரான்சிஸ் ஷவுரியை கைது செய்தனர். பின்னர் விஷாலியின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Vishali ,Sauripuram village, Aluru district, AP ,
× RELATED வலி நிவாரணி மாத்திரை விற்பனை: பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது