×

கோயம்பேடு தனியார் நட்சத்திர விடுதி பாரில் போதையில் தகராறு; காரை ஏற்றி இளம்பெண் கொலை: 17 வயது சிறுமி சீரியஸ்

அண்ணாநகர்: கோயம்பேடு அருகே ஒரு தனியார் நட்சத்திர விடுதியின் பார் ஒன்றில் நேற்றிரவு மதுபோதையில் நடனமாடும்போது இளம்பெண்கள் உள்பட இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, 100 அடி சாலையில் இளம்பெண்கள் சென்று கொண்டிருந்த பைக்மீது, மற்றொரு தரப்பினர் காரை வேகமாக மோதி, ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த இளம்பெண்ணை படுகொலை செய்துள்ளனர். இவ்விபத்தில், பைக்கில் சென்ற மற்றொரு இளம்பெண் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சன்குப்பத்தில் உள்ள ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் யான்சி (18). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது பள்ளி தோழி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதா (18). தம்பிதாவின் பக்கத்து ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி. தம்பிதா மூலம் ஏற்கெனவே யான்சிக்கு 17 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். அந்த சிறுமி, சென்னை ராமாபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை பார்ப்பதற்கு, கடந்த 19ம் தேதி விழுப்புரத்தில் இருந்து யான்சி வந்து, 10 நாட்களாகத் தங்கியுள்ளார். பின்னர் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் குடும்பத்தினருடன் சினிமாவுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தள்ளனர். மறுநாள் இருவரும் வீடு திரும்பியதும், அந்த 17 வயது சிறுமியின் தாயார் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமான யான்சி மற்றும் 17 வயது சிறுமி ஆகிய இருவரும் கடந்த 29ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். பின்னர், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள பாருக்கு நேற்றிரவு யான்சி மற்றும் 17 வயது சிறுமி, தம்பிதா உள்பட 6 பேர் 3 பைக்குகளில் சென்று மது அருந்தியுள்ளனர்.

அந்த தனியார் விடுதி பாரில் முறையான அனுமதியின்றி நடனம் உள்பட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் இருந்த யான்சி உள்பட 6 பேரும் நடனமாடினர். அதேபோல், மற்றொரு தரப்பினரும் மதுபோதையில் நடனமாடியுள்ளனர். அப்போது இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருதரப்பினரும் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த தனியார் நட்சத்திர பாரில் இருந்த பவுன்சர்கள், அடிதடி தகராறை விலக்கிவிட்டு, முதல் கட்டமாக இருதரப்பினரையும் சமரசம் செய்து பாரிலிருந்து வெளியேற்றினர்.

ஆத்திரத்தில் இருந்த இருதரப்பினரும் தனியார் நட்சத்திர விடுதி மற்றும் அருகில் இருந்த பிரியாணி கடைவாசலில் ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியான பவுன்சர்கள், ஓட்டல் பாரை மூடிவிட்டு இருதரப்பினரையும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, யான்சி உள்பட 6 பேரும் கஞ்சா மற்றும் மதுபோதையில் 3 பைக்குகளில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கோயம்பேடு 100 அடி சாலை மேம்பாலம் வழியாக திருமங்கலம் பகுதிக்கு சென்றனர். அதே வழியில் மற்றொரு தரப்பினரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் சென்று கொண்டிருந்த யான்சி தரப்பினரில் ஒருவர், காரின்மீது கல்வீசி தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமான மற்றொரு தரப்பினர், யான்சி மற்றும் 17 வயது சிறுமி சென்று கொண்டிருந்த பைக்கின்மீது கொலை செய்யும் நோக்கில் டிரைவர் சுமன் சக்திவேல் (20) காரை வேகமாக மோதினார். இதில் யான்சி மற்றும் 17 வயது சிறுமி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் யான்சி முகம் சிதைந்த நிலையில், பரிதாபமாக பலியானார்.

இவ்விபத்தில் 17 வயது சிறுமி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த 17 வயது சிறுமியை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சீரியசான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கார் மோதியதில் பலியான யான்சியின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, காரை ஏற்றி ஈழத்தமிழர் முகாமை சேர்ந்த இளம்பெண் யான்சியை கொலை செய்த கார் டிரைவர் சுமன் சக்திவேலை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். மேலும், காரில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் குறித்தும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கார் டிரைவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Coimbed ,Annanagar ,
× RELATED வலி நிவாரணி மாத்திரை விற்பனை: பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது