×

உக்ரைன் ஏவிய விமானத் தாக்குதலில் ரஷ்யாவில் ஒடிசா தொழிலாளி பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா (30), ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டுமானப் பிரிவில் பிட்டராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 22ம் தேதி விடுமுறை முடிந்து ரஷ்யா திரும்பிய இவருக்கு, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இரவு நேர வேலையை முடித்துவிட்டு சக ஊழியர்களுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, உக்ரைன் ஏவிய ஆளில்லா விமானம் அந்தப் பகுதியில் இருந்த சிவிலியன் கட்டிடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது.

இதில் ராமையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த ஜி.தேஜேஸ்வர் ரெட்டி (22) மற்றும் ஜி. கோத்ரபாசி ரெட்டி (35) ஆகிய 2 நபர்கள் படுகாயமடைந்து மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ராமையாவின் பிரேதத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தந்தை மற்றும் சகோதரர் கஞ்சாம் மாவட்ட ஆட்சியர் கீர்த்தி வாசனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இத்தாக்குதல் குறித்து ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘உக்ரைன் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த இந்தியத் தொழிலாளியின் குடும்பத்தாருடன் ரஷ்யா இணைந்து துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : Russia ,Moscow ,Odisha ,Ramaya ,Kanham district ,Moscow, Russia ,
× RELATED தமிழ்நாட்டுக்கு தேவையான யூரியா,...