×

நூல் பாவு மீது ஜீப்பை மோதி நெசவாளர்களை மிரட்டி தவெக நிர்வாகி அராஜகம்

 

நெல்லை: நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அடுத்த தெற்கு வீரவநல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நெசவாளர்கள் தறி நெய்யும் முன்னர் நூல்களில் ஏற்படும் சிக்கலை சரி செய்வதற்காக தினமும் காலையில் அப்பகுதி சாலையில் வீட்டு முன்பாக நீளமாக நூலை கட்டுவது வழக்கம். இதனை நெசவாளர்கள் நூல் பாவு என்பர். அவ்வழியாக வாகனங்கள் ஏதும் வந்தால் நூலை உயர தூக்கி வழிவிடுவர். இதனால் யாருக்கும் எந்தவிதமான இடையூறும் இருந்ததில்லை.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த தவெக ஒன்றிய பொருளாளர் சிவா (30) அவ்வழியாக ஜீப்பில் வந்துள்ளார். அப்போது அந்த ஜீப்பில் உள்ள தவெக கொடியின் முகப்பு நூலில் மோதிக் கொண்டு நின்றது. உடனே அவர் நெசவாளர்களிடம் நூல் பாவினை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதுகுறித்து தகவலறிந்த நெசவாளர்கள், பெண்கள் வீடுகளில் இருந்து ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள், ஜீப்பில் நூல் சிக்கியதால் சில நிமிடத்தில் நாங்களே அகற்றி விடுகிறோம். அதுவரை வாகனத்தை அங்கே நிறுத்தி வைக்குமாறு வேண்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஜீப்பினால்நூலினை மேலும் சேதப்படுத்தியுள்ளார். இதனால் நெசவாளர்களுக்கும், தவெக நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நெசவாளர்கள் நூல் பாவு முழுவதையும் சாலையிலிருந்து அகற்றினர். இதுகுறித்து நெசவாளர்கள் சிவாவிடம் கேட்டபோது, அவர்களை மிரட்டி விட்டு ஜீப்பில் பறந்து சென்றார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thaveka ,Nellai ,Bharathinagar ,Southern Veeravanallur panchayat ,Veeravanallur ,
× RELATED தமிழ்நாட்டுக்கு தேவையான யூரியா,...