×

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்ற வகையில் ரூ.300 கோடி மோசடி: தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனம், பைனான்சியர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

 

* சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
* வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று ரூ.300 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில், சென்னையை தலைமையிடமாக செயல்படும் தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனம் மற்றும் பழைய கார் வாங்கி விற்பனை செய்யும் பைனான்சியர் வீடுகள், நிறுவனங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூ பகுதியை தலைமையிடமாக கொண்டு ‘தங்கம் ஸ்டீல்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஸ்டீல்ஸ் உற்பத்தி தொழிற்சாலை கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 5 ஆயிரம் மெட்ரிக் டன் என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளார். இயக்குநராக பி.கே.வடிவாம்பாள், பி.கே.சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பெயாில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடந்த 2009 மற்றும் 2013ம் ஆண்டு காலத்தில் ரூ.116.21 கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால் வங்கியில் அளித்த உத்தரவாதங்களை மீறி வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.109.94 கோடி பணத்தை திரும்ப கட்ட கோரி கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கி சார்பில் தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

பின்னர் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, ஒரே முகவரியில் பெயர் மட்டும் மாற்றி வங்கியில் ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய துணை பொது மேலாளர் எஸ்.ரவிச்சந்திரன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை ராஜாஜி பவனில் உள்ள சிபிஐயில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி சிபிஐ விசாரணை நடத்தியதில், தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் போலியான ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததும், அந்த பணத்தை வெளிநாடுகளில் உள்ள அவர்களின் துணை நிறுவனங்களுக்கு அனுப்பி மோசடி செய்தது உறுதியானது.

தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர்களான பி.கே.வடிவாம்பாள், பி.கே.சீனிவாசன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வங்கில் பெற்ற கடனை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் உள்ள துணை நிறுவனங்களுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்ட வகையில் ரூ.300 கோடி வரை வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியது உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.

அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் தங்கம் ஸ்டீல்ஸ் லமிடெட் நிறுவனத்தின் அண்ணாநகர் அலுவலகம், தொழிற்சாலை அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் அண்ணாநகர் ஒய் பிளாக் பகுதியில் உள்ள நிர்வாக இயக்குநர், இயக்குநர் வீடுகள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வங்கியில் மோசடி செய்த பணத்தில் வெளிநாடுகளில் உள்ள துணை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ஆவணங்கள், நிறுவனங்களில் பங்கு வர்த்தக ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து பழைய சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விற்பனை செய்து வரும் நிறுவனம் மற்றும் அயனாவரம் போலீஸ் மாணிக்கம் தெருவில் வசித்து வரும் பைனான்சியர் குல்நாஸ் பேகம்(55) என்பவரின் வீட்டிற்கு 2 கார்களில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஸ் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கும்மிடிப்பூண்டி என் மொத்தம் 10 இடங்களில் இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. சோதனை முழுமையாக முடிந்த பிறகு தான் தங்கம் ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் பைனான்சியர் தொடர்பான விபரங்கள், மற்றும் எத்தனை கோடி சட்டவிரோதமாக மோசடி செய்யப்பட்டது என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : State Bank of India ,Enforcement Directorate ,Thangam Steels ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டுக்கு தேவையான யூரியா,...