சென்னை: யோகிபாபு நடித்துள்ள அர்ஜுனன் பேர் பத்து படம் வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு பேசியது: நயன்தாராவுடன் 2016ஆம் ஆண்டே நடித்துவிட்டேன். எந்த ஹீரோயின் நடிக்கிறார் என்பது முக்கியமில்லை. எனக்கு எப்போதும் கதை மட்டும்தான் முக்கியம். மக்கள் என்னிடம் எதிர்பார்ப்பது காமெடியைத்தான். அதுதான் எனக்கு சோறு போட்டது. அதனால் வாழ்நாள் முழுவதும் நான் காமெடியை பெருமையோடு செய்துகொண்டிருப்பேன். இதுவரை நான் 300 படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் கமல்ஹாசனுடன் மட்டும் இன்னும் நடிக்க முடியாமல் இருக்கிறது.
சீக்கிரமே அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல கதை இருந்தால் புதிய இயக்குனர்கள், உதவி இயக்குநர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றார். யோகிபாபு நடித்துள்ள 300வது படம் இது. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா, ஒளிப்பதிவு. தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி, தங்கப்பாண்டி இணைந்து தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பு, சுந்தரபாண்டி.
