ஐதராபாத்: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து இந்தியிலும் நடிக்கும் ஸ்ரீலீலாவும், கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தனது தாயாருடன் ஸ்ரீலீலா சென்று இருந்தார். அன்று இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருந்தார்.
அப்போது அவருடன் ஸ்ரீலீலாவை இணைத்து வந்த கிசுகிசு விவாதத்தை ஏற்படுத்தியது. முன்னதாக ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலிப்பதாக கூறப்பட்டது. அப்போது கார்த்திக் ஆர்யனின் தாயார் டாக்டர் மாலா திவாரி, ‘எனக்கு வரும் மருமகள் ஒரு மருத்துவராக இருக்க வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஸ்ரீலீலா நடித்துக்கொண்டே மருத்துவம் படித்து பட்டம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா, நேபாள பெண் கிரிக்கெட் வீராங்கனை இந்து பர்மாவுடன் இணைத்து கிசுகிசுப்பட்டார். ஆனால், இத்தகவல் எதுவும் அதிகாரப் பூர்வமாக இல்லை. இந்நிலையில் ஸ்ரீலீலாவும், திலக் வர்மாவும் கடந்த ஒரு வருடமாக காதலிப்பதாக கூறப்படுகிறது.
தர்மசாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஸ்ரீலீலாவின் தாயார் சுவர்ணலதா காணப்பட்டார். தவிர, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில், திலக் வர்மாவின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்திருந்த ஒருவருடன் ஸ்ரீலீலா நின்றிருக்கும் போட்டோக்கள் வைரலானது. தன்னை பற்றி வெளியாகும் தகவல்கள் குறித்து ஸ்ரீலீலா இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.
