பிரேக்ஃபாஸ்ட் படத்துக்கு இசை அமைத்தது ஏன்? ஜி.வி.பிரகாஷ் குமார் பதில்

சென்னை: ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம், வரும் 24ம் தேதி திரைக்கு வருகிறது. கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ளார். ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா நடித்துள்ளனர். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, வசந்தபாலன், ரியோ ராஜ், பரத், மைம் கோபி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், ‘‘எனது ஆரம்பகாலத்தில் எனக்கு இசை அமைக்க வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். அந்தவகையில், கடந்த 2009ல் ‘ஆனந்த தாண்டவம்’ என்ற படத்துக்கு இசை அமைக்க வாய்ப்பளித்த ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்துக்கு நான் இசை அமைத்துள்ளேன். தொடர்ந்து நான் புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு இசை அமைப்பேன். இப்படியொரு கதையை ேவறெங்கும் நான் கேட்டது இல்லை என்று சொல்லக்கூடிய யாராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட இயக்குனரை என்னிடம் அனுப்பி வையுங்கள். கண்டிப்பாக நான் இசை அமைக்கிறேன்’’ என்றார்.

Related Stories: